மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம் விரார் மேற்குப் பகுதியில் உள்ள நவாப்பூர் கிராமத்தில் போதையில் செய்த ஒரு விபரீத ஸ்டண்ட் உயிரிழப்பில் முடிந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 40 வயதான ராஜூ சந்து பரத் என்பவர், கடந்த சனிக்கிழமை சாலையோரம் இருந்த ஒரு நல்லபாம்பைப் பிடித்துள்ளார்.

மது போதையில் இருந்த அவர், அந்தப் பாம்பைத் தனது கழுத்தில் சுற்றிக்கொண்டும், அதற்கு முத்தமிட முயன்றும் பல ஆபத்தான சாகசங்களைச் செய்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் இதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நிலையில், ஆக்ரோஷமடைந்த பாம்பு ராஜூவின் கையில் பலமாகக் கடித்தது. சுமார் அரை மணி நேரம் கழித்து அவரது உடல்நிலை மோசமடைந்து மயங்கி விழுந்ததையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாம்புடன் அவர் விளையாடும் இந்த அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து அர்னாலா கடலோரக் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.