அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலுக்கு முன்பாக, இரு அணிகளின் கேப்டன்களும் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டனர். அப்போது குஜராத் கேப்டன் சுப்மன் கில்லின் புதிய தோற்றத்தை ஹர்திக் பாண்டியா கிண்டல் செய்தது ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ் போடுவதற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியாவும், சுப்மன் கில்லும் நேருக்கு நேர் சந்தித்தனர். அப்போது சுப்மன் கில் அடர்த்தியான தாடியுடன் புதிய தோற்றத்தில் இருப்பதைக் கண்ட ஹர்திக், தனது தாடியைத் தடவிக்கொண்டே கில்லைப் பார்த்து சிரித்தார். “உனக்கு இந்தத் தாடி லுக் பிரமாதமாக இருக்கிறது” என்பது போல ஜாடை காட்டி ஹர்திக் கிண்டல் செய்ய, கில்லும் அதை சிரித்தபடியே எதிர்கொண்டார்.

கழுத்து வலி காரணமாகக் கடந்த போட்டியில் சுப்மன் கில் விளையாடவில்லை. ஒரு போட்டிக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பிய அவர், முற்றிலும் புதிய ‘தாடி’ லுக்குடன் களமிறங்கினார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “கழுத்து வலி என்பது சும்மா… தாடி வளர்ப்பதற்காகத்தான் கில் லீவு எடுத்திருக்கிறார்” என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் #GillBeard என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

சுப்மன் கில்லின் இந்தப் புதிய தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர், “இது கேப்டனுக்கான கம்பீரத்தைக் கொடுக்கிறது” எனப் பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலரோ, கில்லின் இந்தத் தோற்றம் அப்படியே விராட் கோலியைப் போலவே இருப்பதாகக் கூறி, இருவரது புகைப்படங்களையும் ஒப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர்.