மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு டிராக்டர் மைதானத்திற்குள் புகுந்து பிட்ச்சையே உழுது போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியைத் தொடங்கி வைக்க அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர் ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பிரமுகரின் ஆதரவாளர் ஒருவர், திடீரென மைதானத்திற்குள் டிராக்டரை ஓட்டி வந்து, கிரிக்கெட் பிட்ச் மீது ஏற்றி அதனைச் சிதைத்துள்ளார். வீரர்கள் மற்றும் நடுவர்கள் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்த இந்த அராஜகச் செயலால் மைதானமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. பிட்ச் முழுவதுமாகச் சேதமடைந்ததால், விளையாடுவதற்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவியது.

இதன் காரணமாகத் தொடர் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்ள விளையாட்டு மைதானத்தை இப்படிச் சேதப்படுத்திய அந்த நபரின் செயல் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “கிரிக்கெட் மைதானத்தில் இப்படியா அராஜகம் செய்வது?” என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். விளையாட்டுப் போட்டிகளில் கூட அரசியல் புகுந்து இப்படி வன்முறையாக மாறியது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.