உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியம் ஆகிவிடாது. ஒருவர் மனநலம், உடல்நலம் மற்றும் சமூகநலம் ஆகியவற்றை ஒரு சேர பெற்றிருந்தால் மட்டுமே அவரை ஆரோக்கியமானவராக கருதலாம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. அத்தகைய மனநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மன நல தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு, மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் காரணமாக ஏற்படும் தற்கொலைகளை தடுத்தல் என பல்வேறு வகையான மனநல பாதிப்புக்கான காரணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் மனநலம் என்பது மூளை சம்பந்தப்பட்டது. மூளையின் செயல்பாடுகள் தான் மனதால் உணரப்படுகிறது. நீண்ட கால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடர் தோல்வி, அதிகமான மதுப்பழக்கம், தூக்கமின்மை, எதிலும் பிடிப்பில்லாமல் இருப்பது ஆகியவை மன அழுத்தம் உருவாகுவதற்கு முதன்மையான காரணங்கள்.

இது தவிர 200க்கும் மேற்பட்ட வகையான மன நோய்கள் உள்ளன. வருடம் தோறும் மனநலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 2001 இல் எடுக்கப்பட்ட உலக சுகாதார கணக்கெடுப்பில் நான்கில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மன அழுத்தம் என்பது பலருக்கும் குறைந்த அளவிலும், ஒரு சிலருக்கு அதிகமாகவும், மிக சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கிறது.

அதிகப்படியான வேலைப்பளுவினாலோ, மேலதிகாரிகளின் கண்டிப்பினாலோ, குடும்ப பிரச்சினைகளினாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் 264 மில்லியன் மக்கள் அதிகமான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2017 ஆம் வருட கணக்கெடுப்பு கூறுகிறது. ஒருவர் சரியான மன நிலையிலிருந்து அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கவும், தன்னுடைய வேலையை திறம்பட செய்யவும் முடியும். மனமும், உடலும் ஆரோக்கியமாய் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதராக மாற முடியும். அதற்காக இந்த தினத்தை மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.