உடல் ஆரோக்கியத்தைப் போலவே மனநலத்தின் ஆரோக்கியமும் நன்றாக இருப்பது அவசியம். உடல்நலத்தை பேணி காப்பது போல மனநலத்தில் கவனம் செலுத்துவதன் மூலமாக மனரீதியான பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மனநல ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல ஆரோக்கிய நாள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. நம்முடைய மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நாம் தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு யோகா மற்றும் தியானம் செய்வதை சிலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை பின்பற்றினாலே நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனசோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

மனரீதியாக ஆரோக்கியமாக இருக்க உடல் ரீதியாகவும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும் போது மூளையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படக்கூடும். இந்த மாற்றத்தால் கார்டிசசோல் உற்பத்தியும் குறைவாக இருக்கும் என்பதால் இது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

தன்னம்பிக்கையையும் தன் முனைப்பையும் எப்போதும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும். உங்களை மற்றவர்களுடன் எப்போதும் இணக்கமாக வைத்துக் கொள்வது தான் கற்றுக் கொள்வதின் முதல் அறிகுறியாகும்.

நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் எப்படி அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதனைப் போலவே நாமும் மற்றவரிடம் கனிவாகவும் அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

சிலரது உடல் மட்டும் இயல்பில் இருக்கும் அப்போது சிந்தனை முழுக்க வேறு எதையாவது நினைத்துக் கொண்டிருக்கும். ஒன்று கடந்த கால பிரச்சனையை நினைத்து மனம் வருந்தி கொண்டிருப்பார்கள் இல்லையென்றால் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதுதான் நம்முடைய மன ஆரோக்கியத்தை பெரும் அளவில் பாதிக்க செய்யும். எனவே எப்போதும் வேறு எதைப்பற்றியாவது நினைத்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு இயல்பு நிலையில் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.