ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி மனநல ஆரோக்கிய நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1992-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி மன நலத்திற்கான உலக கூட்டமைப்பு உலக மனநல நாளை அனுசரிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. ஆண்டுதோறும் இந்த நாள் புதிய கருப்பொருளுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆரம்ப காலத்தில் இதற்கென தனி கருப்பொருள் கிடையாது. இதன் முக்கிய நோக்கம் மனநலம் தொடர்பான ஆலோசனையை ஊக்குவித்து, அது தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். முதல் முதலாக மனநலம் நாள் குறித்த பிரச்சாரம் பிரபலம் அடைந்ததால் 1994-ஆம் ஆண்டு முதல் கருப்பொருள் உருவாக்கப்பட்டது.

அதன் பிறகு படிப்படியாக உலகம் முழுவதும் மனநல சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பின்பற்றப்பட்டது. இந்நிலையில் மனநல பிரச்சனைகள் பற்றி பேசுவதன் மூலம் அது தொடர்பான சிக்கல்களை புரிந்து கொள்ளலாம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களோடு உரையாடுவதன் மூலம் அவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வரலாம்.

இந்த நாளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களோடு உரையாடுதல், பணியிடத்தில் ஏற்படும் மன அழுத்தம், குடும்பங்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்க வேண்டும். இந்த ஆண்டு மனநலம் என்பது உலகளாவிய மனித உரிமை என்பதை கருப்பொருளாக கொண்டுள்ளது.