தனிப்பட்ட நபரின் மனநலம் சமூகத்தையும் தேசத்தையும் ஆரோக்கியமாக உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒருவருக்கு நல்ல சமநிலையான வாழ்க்கையை அடைய மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் அவசியமாகும். மனநல ஆரோக்கியத்தை எடுத்துரைக்கும் விதமாக உலக மனநிலை தினம் அக்டோபர் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கமே ஒருவர் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதற்கும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க தேவையான நடவடிக்கை எடுப்பதற்கும் சுற்றி இருப்பவர்களும் சமூகமும் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான்.

இன்றைய காலத்தில் டீனேஜ் வயதினர் எதிர்கொள்ளும் மனநல பிரச்சனைகள் அவர்களை வழிநடத்துவதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு என்பது முக்கியமானது. 10 முதல் 19 வயதிற்கு உட்பட்ட ஆறு பேரில் ஒருவர் வறுமை, துஷ் பிரயோகம், வன்முறை வெளிப்பாடு மற்றும் சமூக மாற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டு மனநல பிரச்சனைக்கு தள்ளப்படுகின்றனர். உலக அளவில் 10 முதல் 19 வயதுடைய ஏழு பேரில் ஒருவர் மனநல நிலைமைகளை அனுபவித்தாலும் அவர்கள் பெரும்பாலும் சிகிச்சை பெறாமல் இருக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது. குழந்தைகளின் மனசோர்வு என்பது அவர்களுக்கு தற்கொலையை தூண்டும்.

நடத்தை கோளாறுகள் இளம் பருவத்தினர் மத்தியில் பொதுவானவை. இவர்களுக்கு கவனக்குறைவு ஹைபர் ஆக்டிவிடி கோளாறு, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் விளைவுகளை பொருட்படுத்தாமல் செயல்படுவது போன்றவை இருக்கலாம். டீன் ஏஜ் வயதினர் எதிர்கால வாழ்க்கை என்னவாக போகிறோம் என்று தீர்மானிக்கும் கட்டத்தை எட்டி இருப்பார்கள். இது பெரும்பாலும் பரிசோதனைக்கான வலுவான தூண்டுதலாக அவர்களை மாற்றக்கூடும். இந்த நிலைக்கு தயாராக அவர்கள் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வெளிப்புற தாக்கங்களுக்கு முன்கூட்டியே அடிபணிவதை நாம் தவிர்க்க வேண்டும். சவால் இருந்தால் நண்பர்கள் அல்லது மனநல ஆலோசகர் இடம் ஆலோசனை பெறுவதற்கு தயங்க கூடாது. மனநலம் தக்க வைக்க முறையான பயிற்சிகள், தியானம் மற்றும் யோகா ஆகியவற்றை கையில் எடுக்க வேண்டும்.