ஒரு மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு மனநலத்தின் ஆரோக்கியமும் முக்கியம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர் கூட மனரீதியாக சோர்வு அடைகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி உலக மனநல நாளாக அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில் ஒருவரின் மன நலத்தை எப்படி கவனிப்பது மன ரீதியான பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஒருவரது உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் ஒருவித தொடர்பு இருக்கிறது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்தாலே மனநலம் சார்ந்த பிரச்சினைகளும், பாதிப்புகளும் வருவதை தவிர்க்கலாம். உடற்பயிற்சி என்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமில்லாமல் மனதிற்கும் ஆரோக்கியம் தந்து கவலை, சோர்வு ஏற்படுவதை தடுக்கிறது.

நாம் உடலுக்கு ஓய்வு அளிக்கும் போதெல்லாம் மனம் அமைதியாகி பல சிந்தனைகளிலிருந்து விடுபடுகிறது. பாடல் கேட்பது, எழுதுவது, பிடித்த வேலையை செய்வது, ஊர் சுற்றுவது என ஒவ்வொருக்கும் பிடித்த தனி விஷயங்கள் இருக்கிறது. அதனை செய்தாலும் மனநலத்தை ஆரோக்கியமாக பேணி பாதுகாக்கலாம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல் நம்மால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கலாம்.