கடலூர் கோட்ட தபால் நிலையங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் 2023-24-ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பெண்களுக்காக மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (மகளிர் மதிப்பு திட்டம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளும், பெண்களும் வயது வரம்பு இன்றி சேரலாம். இந்த திட்டம் கடந்த 1- ஆம் தேதி முதல் 31-3-2025 வரை செயல்படும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 7.5 சதவீதம், காலாண்டிற்கு ஒரு முறை கூட்டு வட்டி அடிப்படையில் கணக்கிட்டு சேர்க்கப்படும்.
தபால் நிலையத்தில் கணக்கை தொடங்கிய நாளிலிருந்து 2 ஆண்டுகளில் இந்த திட்டம் முதிர்ச்சி அடையும். இதனையடுத்து தேவைப்பட்டால் கணக்கு தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு பிறகு 40 சதவீத பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம். மேலும் கணக்கு தொடங்கி 6 மாதங்களுக்கு பிறகு எந்த நேரத்திலும் முன்கூட்டியே கணக்கை முடித்து கொள்ளலாம். அவ்வாறு முடிக்கப்படும் கணக்கிற்கு 5.5 சதவீதம் வட்டி கணக்கிட்டு வழங்கப்படும். எனவே இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் தபால் நிலையங்களை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.