விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மண்குண்டாம்பட்டி கிராமத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற ரோல் கேப் வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 40 அறைகள் இருக்கிறது. இந்த ஆலையில் 60-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நவீன முறையில் ரோல் கேப் வெடி தயாரிப்பதற்காக ஒரு வகையான புதிய எந்திரம் நிறுவப்பட்டது.

நேற்று பால சரஸ்வதி, முருக லட்சுமி உள்பட ஏழு பேர் அந்த எந்திர அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ரசாயன மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது உராய்வு காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பாலசரஸ்வதி, முருக லட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இதனை பார்த்ததும் மற்ற பெண்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ பரவாமல் தடுத்தனர். பின்னர் இரண்டு பெண்களின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலையின் போர் மேன் கண்ணன் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.