கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மனு கொடுக்க வந்த ஒரு பெண் தனது கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் தீக்குளிக்க முயன்ற பெண் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரனின் மனைவி ராஜலட்சுமி என்பது தெரியவந்தது.
வீட்டில் தனியாக இருந்த ராஜலட்சுமியை 3 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.