பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பங்களா பேருந்து நிறுத்தம் பள்ளிவாசல் தெருவில் சிவில் இன்ஜினியரான வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று மங்கையர்க்கரசி பெரம்பலூர்- எளம்பலூர் ரோடு ரோஸ் நகரில் இருக்கும் வினோத்குமாரின் தங்கை செல்வியின் வீட்டிற்கு சென்று தன்னை வினோத்குமாருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி திடீரென வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து மங்கையர்கரசி வீட்டில் இருந்த வினோத்குமார், மாமனார் பெருமாள், மாமியார் கமலா, நாத்தனார் செல்வி ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறதுm அப்போது வீட்டு முன்பு அமர்ந்து ஏன் இப்படி பிரச்சினை செய்கிறாய் என கேட்டு செல்வி அருகே கிடந்த கல்லை எடுத்து மங்கையர்கரசியின் தலையில் அடித்தார். இதனால் முன்பக்க தலையின் இடது புறம் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும் கமலா காலணியாலும், பெருமாள் கைகளாலும் மங்கையர்கரசியை தாக்கியுள்ளனர்.

இனிமேல் இங்கு வர கூடாது எனக்கூறி மங்கையர்கரசியை விரட்டிய போதும் வினோத்குமார் எதுவும் கேட்காமல் வேடிக்கை பார்த்ததாக தெரிகிறது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கையர்கரசியின் தலையில் இரண்டு தையல் போடப்பட்டது. இதுகுறித்து அறிந்த பெரம்பலூர் போலீசார் மங்கையர்கரசியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கடந்த 2021-ஆம் ஆண்டு வினோத்குமாருக்கும் மங்கையர்கரசிக்கும் திருமணம் நடைபெற்றது.

கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக வினோத்குமார் தனது தங்கையின் வீட்டிற்கு வந்து வசித்து வந்தார். இது தொடர்பாக மங்கையர்க்கரசி ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்திய போது வினோத்குமார் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக எழுதி கொடுத்துள்ளார்.

ஆனால் மங்கையர்கரசி தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றுக் கொள்வதாகவும் கூறி சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று வினோத்குமாரின் தங்கை வீட்டிற்கு சென்று மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என கூறி மங்கையர்க்கரசி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.