நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஓடோடும்வயல் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் சூரியன் என்பவரது வீட்டு மீது மரம் முறிந்து மேற்கூரையை உடைத்துக் கொண்டு பயங்கர சட்டத்துடன் கட்டிலில் விழுந்தது. இதனால் தூங்கி கொண்டிருந்த சூரியனின் மனைவி கமலம் என்பவர் படுகாயமடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சூரியன் தனது மனைவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த பந்தலூர் தாசில்தார் நடேசன், துணை தாசில்தார்கள் குமார், செந்தில் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மரம் விழுந்து சேதமான வீட்டை பார்வையிட்டனர். மேலும் வருவாய் துறையினர் சார்பில் கமலத்தின் குடும்பத்தினருக்கு ரூ.4,100 நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.