புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கை வயல் பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்களுக்காக கடந்த 2016-ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்ட நிலையில் அந்த தொட்டியில் சில சமூக விரோதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மனித மலத்தை கலந்தனர். இந்த தண்ணீரை குடித்த பல சிறுவர்கள் உடல் நல கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கோவிலில் பட்டிலின மக்களை அனுமதிக்காதது மற்றும் தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டது போன்ற விஷயங்கள் தெரியவந்தது.

அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்று அவர்களுடைய உரிமையை மீட்டுக் கொடுத்தார். தீண்டாமை விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. ஆனால் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கழிந்த சமூக விரோதிகள் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறி எதிர்க்கட்சிகள் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அதோடு ஆளும் கட்சியான திமுக இந்த விவகாரத்தில் அமைதி காப்பது எதற்காக என்றும் எதிர் கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருவதோடு, இந்த விவகாரத்தில் நேரடியாக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ஒருவேளை தீண்டாமை விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் ஜனவரி 11-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போராட்டம் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமூக நீதியை திமுக அரசால் மட்டும் தான் தற்போது காப்பாற்ற முடியும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் அமைதி காத்து வருவது எதற்காக என்று திருமுருகன் காந்தி விமர்சித்துள்ளார். மேலும் திருமுருகன் காந்தி தீண்டாமை விவகாரத்தில் இதுவரை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது திமுக அரசுக்கு பெருத்த அவமானம் என்றும், அவ்வாறு செய்தவர்களை அரசு அங்கீகரிப்பதற்கு இது அர்த்தமாகிறது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.