கோவையில் பாஜக கட்சியின் சார்பில் 3 இடங்களில் நம்ம ஊர் பொங்கல் என்ற பெயரில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். அதன் பிறகு பாஜக சார்பில் நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தை குஷ்பு தொடங்கி வைத்தார். அதன் பிறகு குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றும் தமிழ்நாடு என்றும் அழைக்கலாம். எப்படி அழைத்தாலும் இந்தியாவின் ஒரு அங்கம் தான் தமிழ்நாடு. நான் மும்பையில் பிறந்தாலும் நானும் ஒரு தமிழச்சி தான். பொங்கல் நம்முடைய பாரம்பரிய பண்டிகை.

எல்லோர் வீட்டிலும் பொங்கல் வைப்பது சந்தோஷத்தை தரும். தமிழக அரசு கொடுத்துள்ள பொங்கல் பரிசு வெட்கக்கேடானது. ஒரு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பிச்சை கொடுப்பது போன்று இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை களத்தில் இறங்கி போராடினார். அண்ணாமலை ஒரு துணிச்சலான தலைவர். காங்கிரஸ் கட்சியின் நடை பயணத்தில் கலந்து கொண்டது கமல்ஹாசனின் சொந்த விருப்பம். அது அவருடைய கட்சியின் தனிப்பட்ட உரிமை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. ஆனால் நான் எந்த படத்திற்கும் போக மாட்டேன். மேலும் பொங்கல் பண்டிகையின் போது நான் வீட்டில் தான் இருப்பேன் என்று கூறினார்.