உலகின் மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார கிரிக்கெட் தொடராகக் கருதப்படும் ஐபிஎல் போட்டியின் 19வது சீசனுக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் தொடங்கியது. இந்தச் சூழலில், ஐபிஎல் ஏலம் தொடர்ந்து வெளிநாடுகளில் நடத்தப்படுவது குறித்து காங்கிரஸ் தலைவரும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடப் பற்றாக்குறை உள்ளதா அல்லது இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஐபிஎல் தொடர் தேசியப் பெருமையின் அடையாளமாக இருக்கும்போது, இவ்வளவு பெரிய வருமானம் ஈட்டும் நிகழ்வை நமது நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு மாற்றுவது ஏன் என்றும் பிசிசிஐ-க்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்தியாவிலேயே இந்த நிகழ்வை நடத்தாமல் அபுதாபிக்குக் கொண்டு செல்வதன் கட்டாயம் என்ன என்று வினவியுள்ள பிரியங்க் கார்கே, இந்தச் செயலை வேறு யாராவது செய்திருந்தால் அவர்கள் உடனடியாகத் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள் என்று சாடியுள்ளார்.
ஆனால், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்ன செய்தாலும் அது வளர்ந்த இந்தியாவுக்காகத்தான் என்று சொல்லப்படுவது ஆச்சரியமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் ஏலம் மீண்டும் வெளிநாட்டிலேயே நடத்தப்படுவது குறித்து எழுந்துள்ள இந்தக் கேள்விகள் அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
