தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றிருந்தார். அமைச்சராக பதவி ஏற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு முதல் முறையாக சென்றதால் அவருடைய டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியது. பிரதமரின் நரேந்திர மோடியை உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, டெல்லிக்கு வரும்போது தன்னை சந்திக்குமாறு பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி நானும் அவரை சந்தித்தேன்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நான் பிரதமரிடம் கூறிய போது அவரும் அதற்கு சில விளக்கங்களை கொடுத்தார். நான் நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளேன். பிரதமர் மோடி என்னிடம் நீண்ட நேரம் மனம் விட்டு பேசி நிலையில் அவர் எந்த உறுதியும் எனக்கு கொடுக்கவில்லை. அதன் பிறகு தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாடு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் குறித்து நான் பிரதமரிடம் எடுத்துரைத்ததோடு அடுத்த முறை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும் இந்திய விளையாட்டு ஆணையம் சென்னையிலும் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.