தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். இவர் இளைஞர் அணி செயலாளராகவும் இருக்கிறார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்களும், திமுக கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் உதயநிதிக்கு எந்நேரமும் அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், யாரும் எதிர் பார்க்காத விதமாக உதயநிதிக்கு திடீரென அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் மாளிகையில் உதயநிதிக்கு பதவிப்பிரமாணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி சரமாரியாக விமர்சித்தார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்த நிலையில், தற்போது அமைச்சர் அமைச்சர் சாமிநாதனும் அப்படி கூறியிருக்கிறார்.

அதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்ததோடு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அமைச்சர் அன்பில் மகேஷ் முன்மொழிந்திருந்தால், அதை நான் வழிமொழிகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து திமுக அமைச்சர்கள் துணை முதல்வர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி வருவதால் கூடிய விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.