தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம் குறித்து ஆளுநர் கூறும் கருத்து ஆபத்தானவை.

ஆளுநர் ரவியின் திட்டம் தான் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச் செல்வது தான் அவரது நோக்கம். இதுவரை நுண்ணிய வர்ணாசிரம அரசியலை பேசி வந்த ஆளுநர் தற்போது வெளிப்படையாக அரசியல்வாதியாகி பேசுகிறார்.

திராவிட ஆட்சி குறித்த ஆளுநரின் விமர்சனம் பாஜகவின் தேர்தல் அரசியல் உள்நோக்கத்தை காட்டுகிறது. கமலாலயத்தில் போய் பேச வேண்டியதை ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு பேசுவது கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு, தமிழன், தமிழ் என்பவை ஆளுநர் ரவிக்கு கசப்பாக இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய பீகாரும்,  உ.பி.யும் இன்று எப்படி இருக்கிறது என்பது ஆளுநருக்கு தெரியாதா?

திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து ஆளுநரின் வயிறு ஏன் எரிகிறது? அந்த சொல் எதனால் அவருக்கு சுடுகிறது. தமிழர்களுக்கு எதிராக ஆளுநர் ரவி பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவது அவருக்கு சிறந்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது என்ன என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.