தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தான் இயக்கிய பல வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடித்துள்ள விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. விடுதலைப் படம் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், முதல் பாகத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வெற்றிமாறன் உதவி இயக்குனர் உட்பட விடுதலைப் படத்தில் பணியாற்றிய 25 நபர்களுக்கு செங்கல்பட்டு அருகே ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை பரிசாக வாங்கி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சத்தமின்றி இயக்குனர் வெற்றிமாறன் செய்ய படக்குழுவினர் அனைவரும் இதை ஒரு விழாவாக நடத்துங்கள் என்று கூறியுள்ளனர். இதன் காரணமாக இயக்குனர் பாரதிராஜா முன்னிலையில் இந்த நிகழ்ச்சி விரைவில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் வெற்றிமாறன் நிலம் வாங்கி கொடுத்த தகவல் தற்போது வலைதளத்தில் வெளியான நிலையில் அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.