சமூக வலைதளங்களில் விலங்குகளின் குறும்புத்தனமான வீடியோக்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், மெக்ஸிகோ நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குள் இரண்டு குரங்குகள் புகுந்து ‘கெத்தாக’ பழங்களைத் திருடிச் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
மெக்ஸிகோவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கான்குனில் (Cancun) உள்ள ஒரு ஹோட்டலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ‘புஃபே’ (Buffet) எனப்படும் உணவு மேஜையில் விருந்தினர்களுக்காக ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அப்போது அங்கிருந்த ஸ்பைடர் குரங்குகள் (Spider Monkeys) இரண்டு, யாருக்கும் பயப்படாமல் மிகவும் சாதாரணமாக ஹோட்டலுக்குள் நுழைந்தன.
அங்கிருந்த மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வாழைப்பழங்களை தங்களது இரண்டு கைகளிலும் அள்ளிக்கொண்டு, மிகவும் நிதானமாக அங்கிருந்து வெளியேறின.
அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்களோ? அல்லது விருந்தினர்களோ? அந்தக் குரங்குகளைத் துரத்த முயற்சிக்கவில்லை. மாறாக, இந்த அழகான ‘திருட்டை’ தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து ரசித்தனர். “இது திருட்டு இல்லை, இயற்கை வசூலிக்கும் வாடகை” என நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
