கர்நாடக மாநிலம், மைசூரில்  உள்ள சாந்திநகர் பகுதியில், சையத் சூஃபியான் (19) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் டீ குடிக்கச் சென்றபோது, போதைக்கு அடிமையான சில இளைஞர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதயகிரி காவல் நிலையத்தில் (Udayagiri Police Station) இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலை 5:40 மணியளவில் டீ குடிக்கச் சென்ற சூஃபியானுடன், மது போதைக்கு  அடிமையான இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, இரண்டு நண்பர்கள் சேர்ந்து சூஃபியானை துரத்திச் சென்று கத்தியால்  குத்திக் கொலை செய்துள்ளனர்.

அவரது நெஞ்சு மற்றும் முதுகில் கத்திக்குத்து விழுந்துள்ளது. இது சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவாகியிருந்தும், யாரும் உதவிக்கு வராததால் சூஃபியான் சாலையில் உயிரிழந்துள்ளார்.

கொலையாளிகள் கஞ்சா, போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்கள் என்று பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். சாந்திநகரில் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், “என் மகனைக் கொன்றவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்; இல்லையெனில் எங்களையும் கொன்று விடுங்கள்” என்றும் கொலையான சூஃபியானின் தாய் கண்ணீருடன் கதறியுள்ளார்.