புதுச்சேரி எல்லையான கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் கிருமாம்பாக்கம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் மதுபோதையில் சாலையோரம் படுத்துக்கொண்டு அந்த வழியாக சென்ற பொது மக்களை திட்டி உள்ளார். இதனை பார்த்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் கோபமடைந்த அவர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அவரை போலீசார் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர். அப்போது நானும் போலீஸ் தான் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பூவாணிகுப்பத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பது தெரியவந்தது.

அவர் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே ஜனார்த்தனன் மதுபோதையில் ரகளை செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் விசாரணை நடத்தி ஜனார்த்தனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.