கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் ரோட்டில் ஐ.டி ஊழியரான பிரதி(34) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரதியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும், யூடியூபில் லைக், ஷேர் செய்தல் வருமானம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை நம்பிய பிரதி அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் கூறியபடி குறைந்த அளவு முதலீடு செய்தவுடன் அந்த தொகைக்கு பிரதிக்கு லாபம் கிடைத்தது. இதனை உண்மை என்று நம்பிய பிரதி அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் 19 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தார். அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரதி கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, பிரதி 5 வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தியுள்ளார். அந்த 5 வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.