நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கோத்தகிரி, குன்னூர் ஆகிய வனப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி சாலை கலெக்டர் பங்களா பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டது. நேற்று அதிகாலை மாண்டரசோ காலனியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை வீட்டிற்குள் நுழைய முயன்றதை பார்த்து மாடியில் இருந்து நாய் பயங்கரமாக குரைத்தது.

இதனால் படிக்கட்டு வழியாக மாடிக்கு சென்ற சிறுத்தை நாயை கவ்வி இழுத்துச் செல்ல முயன்றது. அந்த சத்தம் கேட்டு வந்த உரிமையாளர் சிறுத்தையை பார்த்து சத்தம் போட்டார். இதனால் சிறுத்தை நாயை கீழே போட்டுவிட்டு தப்பி சென்றது. இதற்கிடையே படுகாயமடைந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.