திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் உட்பட 24 பேரின் காவல் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மேடையில் ஏற்றப்பட்டனர். கருப்பு உடையில் வந்த விஜய் சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்ற பாதகையை ஏந்தி நின்றார்.

இந்நிலையில் மேடையில் இருந்த விஜயை காண்பதற்காக தவெக தொண்டர்கள் முந்தி அடித்துக் கொண்டும், தடுப்புகள் மீதும் ஏறியதால் தடுப்பு கம்பிகள் சேதமடைந்தது. இந்நிலையில் அனுமதி கொடுத்தால் அந்த சேதமடைந்த பொருட்களை தாங்களே சரி செய்து கொடுப்பதாக மாநகராட்சிக்கு தவெக கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து தவெக மாவட்ட செயலாளரான வேல்முருகன் சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டல உதவி பொறியாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தவெக சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது சிவானந்தா சாலையில் இருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்தது.

தாங்கள் அனுமதி அளித்தால் இவற்றை தவெக சார்பாக உடனடியாக சரி செய்து தருகிறோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிவானந்தா சாலையில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்து, உடைந்து கிடந்த தடுப்பு கம்பிகளை அப்புறப்படுத்தினர்.