தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 2ஆவது மாநில மாநாடு மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், “பாசிச பாஜகவுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடி கூட்டணி வைத்துள்ளது.
பொருந்தா கூட்டணி என்பதால் மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணி அமைத்துள்ளது” என அதிமுகவை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், பாஜகவை கொள்கை எதிரியாகவும், திமுகவை அரசியல் எதிரியாகவும் அறிவித்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை எதிர்க்கப்போவதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
விஜய்யின் இந்த விமர்சனம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “விஜய்யின் கருத்துக்கு அதிமுகவே பதில் சொல்ல வேண்டும்.
தவெக மாநாட்டில் கருத்தியல் தெளிவு இல்லை. கொள்கையும், அரசியலும் வேறு வேறு இல்லை; இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. விஜய் பாஜகவை கொள்கை எதிரியாகவும், திமுகவை அரசியல் எதிரியாகவும் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
பாஜகவின் அரசியல் நடவடிக்கைகளை ஏற்கிறார்களா? திமுகவின் கொள்கைகளை ஏற்கிறார்களா? இதற்கு விஜய் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என கூறி, விஜய்யின் அறிவிப்பு குறித்து கடுமையாக விமர்சித்தார்.
