விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக வெற்றிகழகத் தலைவர் நடிகர் விஜய் பரந்தூர் விமான நிலைய பிரச்சனை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த பிரச்சனை குறித்து புரிதல் வேண்டும், ஆனால் அவருக்கு புரிதல் இல்லை. கடந்த ஆண்டு கட்சி ஆரம்பித்து தற்போது தான் அவர் களத்திற்கு வந்துள்ளார். அரிட்டாப்பட்டி பிரச்சினை குறித்து நாங்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி இருக்கிறோம்.

இது குறித்து நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தியுள்ளோம். பரந்தூர் பிரச்சனையில் அரசியல் தேவையில்லை. டங்ஸ்டன் சுரங்க பிரச்சனையில் டெண்டர் விட்டவுடனே போராட்டம் நடத்தப்பட்டது, அதனால்தான் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் இந்திய கூட்டணி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வலுவாக உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் விவசாயிகளை, பனைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று கூறினார்.