வேலூர் மாவட்டம் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்குகளில் நேற்று முன்தினம் பெண் ஒருவரின் பிணம் கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அவ்விடத்தை  சுற்றியுள்ள பகுதியில் இருந்த  சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிசிடிவி காட்சிகளில் ஒரு இளம் பெண்ணை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பாலமதி மலைக்கு அழைத்து செல்கிறார். அதன் பின்னர் மீண்டும் கீழே வரும்போது வாலிபர் மட்டும் மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றுள்ள காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் அந்த வாலிபரை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் ஓட்டேரியை சேர்ந்த  சப்-இன்ஸ்பெக்டரின் மகன் கார்த்தி (22) என்று தெரியவந்தது. இவர் ஏ.சி.மெக்கானிக் வேலை செய்து வந்தார். பின் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊதாரித்தனமாக சுற்றி திரிந்ததால் அவருடைய தந்தை, கார்த்தியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். இவருக்கும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள குள்ளஞ்சாவடியை சேர்ந்த குணப்பிரியா (23) என்ற பெண்ணுக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டது. இதன்பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைத்து பெற்றோருடன் பேசியபோது, அவர்கள் ஒத்து வரவில்லை. இதனையடுத்து கடந்த 8 மாதங்களுக்கு முன் இருவரும் நண்பர்கள் ஆதரவில்  திருமணம் செய்து கொண்டனர்.

பின் நண்பர் வீட்டில் இருவரும் இணைந்து வாழ்க்கை நடத்தினர். கார்த்தி மேளம் அடிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். தற்போது குணப்பிரியா 7 மாத கர்ப்பமான நிலையில், கார்த்தி பெற்றோரை சமாதானம் செய்து, தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி  குணப்பிரியா அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி அங்கு கிடந்த கட்டையால் குணப்பிரியா தலையில் அடித்ததில், அவர் மயங்கி அந்த இடத்திலே கீழே விழுந்தார். அதன்பின் ஆத்திரம் அடங்காத கார்த்தி உடைந்த மதுபாட்டிலை கொண்டு மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து கார்த்தி, கர்ப்பிணி மனைவியை கொன்று மலை உச்சியில் இருந்து அவரது உடலை கீழே தள்ளி விட்டு சென்றுள்ளார். இவ்வாறு கார்த்தி போலீசாரிடம்  தெரிவித்ததை வாக்குமூலமாக பெற்று பதிவு செய்தனர். இது தொடர்பாக கார்த்தியை  கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் வேலூர் மத்திய ஜெயிலில் கார்த்தி அடைக்கப்பட்டார்.