ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் அமைந்துள்ள குவிநானா சாலையில் காலை வேளையில் வாகனங்கள் வழக்கம் போல் வேகமாக சென்று கொண்டிருந்தன. அப்போது ஒரு வாத்து, அதனுடைய குஞ்சுகளை அழைத்துக்கொண்டு சாலை ஒன்றை கடக்க முயன்றது.

 

வாத்தை கண்டு வாகன ஓட்டிகள் சாலையில் வாகனங்களை நிறுத்தி, அதன் குடும்பம் முழுவதும் சாலையை கடந்து செல்லும் வரை காத்திருந்தனர். இந்த மனிதநேயம் நிறைந்த காட்சி, சாலையோரத்தினரை உற்சாகப்படுத்தியது.

ஆனால், எதிர்பாராத விதமாக, பின்னால் வந்த 6 கார்கள் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை என்றாலும், வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

வாத்து மற்றும் அதன் குஞ்சுகள் சாலையை பாதுகாப்பாக கடந்ததையடுத்து, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் அதே வாத்து குடும்பம் சாலையை கடந்ததுடன், அந்த இடம் தற்போது மக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து துறை, இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. “வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது காரில் இருந்து இறங்காதீர்கள்.

அவசரம் வேண்டாம். தேவையான உதவிக்கு உரிய அதிகாரிகளை அழையுங்கள்,” என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த சம்பவம், மனித நேயம் முக்கியமா அல்லது பாதுகாப்பு முக்கியமா என வாக்குவாதங்களை கிளப்பியுள்ளது.