திருப்பூர் மாவட்டத்திலுள்ள பின்னல் ஆடை மற்றும் அதனைச் சார்ந்த ஏராளமான நிறுவனங்களில் அனேக வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் திருப்பூர் ரயில் தண்டவாளத்தில் கேரளாவில் இருந்து சென்னை சென்ற ரயிலில் அடிப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சஞ்சீவ் குமாரை கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டு சென்றதாக பரவிய வதந்தியின் காரணமாக ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே காவல் நிலையம் முன்பாக குவிந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்களும் பரவி வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் இடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சொந்த ஊர் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் குவிந்து வருகிறார்கள். இது குறித்து வட மாநில தொழிலாளர்களிடம் கேட்கும்போது அடுத்த வாரம் ஹோலி பண்டிகை வருவதால் அதனை கொண்டாட ஒரு மாதம் சொந்த ஊருக்கு செல்வதாக தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்கல் நடத்துவதாக பரவி வரும் நிலையில் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை சந்தித்த காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் வெளியானது போலியான வீடியோ எனவும் எனவே யாரும் பதற்றம் அடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் வட மாநில தொழிலாளர்களுக்காக பிரத்தியேக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஸ்பெஷல் செல் 24 மணி நேரமும் இருக்கிறது. ஏதேனும் பிரச்சனை என்றால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9498101300 , 04212970017 என திருப்பூர் மாவட்ட காவல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வட மாநிலத்தவர்கள் குறித்து பொய் செய்தி பரப்பினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.