உங்களது சம்பளமானது வருமான வரி அடுக்கில் வந்தால் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வது மிகவும் அவசியம் ஆகும். ஒரு நபர் தன் வருமானத்துக்கு வரி விதிக்கப்பட்ட போதிலும் ITRஐ தாக்கல் செய்யவில்லை எனில், அவர் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதாவது, ITR உரிய நேரத்தில் தாக்கல் செய்யப்படாவிட்டால் பிரிவு 234F-ன் கீழ் ரூ.5000 அபராதம் விதிக்கப்படலாம். எனினும் உங்களது மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருப்பின், அபராதக் தொகை ரூ.1,000 மட்டும் ஆகும். மற்றொருபுறம் உங்களது வருமானத்துக்கு வரி விதிக்கப்படாவிட்டால் வருமான வரிக்கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததற்காக உங்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது.

அபராதம் தவிர்த்து நிலுவையிலுள்ள வரித் தொகைக்கு ஒரு மாதத்திற்கு 1 சதவீத வட்டி (அ) வரியின் ஒரு பகுதி (பிரிவு 234Aன் படி) வசூலிக்கப்படும். இந்த வட்டியானது தொடர்புடைய நிதி ஆண்டிற்கான உங்களது வருமானத்தை தாக்கல் செய்யும் தேதியில் இருந்து நீங்கள் உங்களது வருமானத்தை தாக்கல் செய்யும் தேதி வரை கணக்கிடப்படும். பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட் (அ) உங்களின் வணிகத்தில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால், அதை முன்னெடுத்து சென்று அடுத்த வருடம் வருவாயில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இது உங்களின் வரிப் பொறுப்பினை குறைக்கும். எவ்வாறாயினும் நிலுவை தேதிக்குள் வருமானம் தாக்கல் செய்யப்படாவிட்டால் மற்றும் உங்கள் வருமான வரி தாக்கில் இழப்பு அறிவிக்கப்படாவிட்டால் இந்த இழப்புகளை எதிர்கால லாபத்திற்கு ஈடுசெய்ய இயலாது.

எனினும் ஒரு வீட்டு சொத்துடன் தொடர்புடையதாக இருப்பின், இழப்புகளை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும். உண்மையான வருமானத்தினை உரிய தேதிக்குள் தாக்கல் செய்தால் வரி செலுத்துபவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல் செய்யலாம். இருந்தாலும் ஆரம்ப ஐடிஆர் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டால், ITR திருத்தியதன் பலன் கிடைக்காது. இதன் விளைவாக தாமதமான ITR-ஐ சமர்ப்பிக்கும்போது, ​​வரி செலுத்துவோர் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும்.

அதோடு தாமதமான ITRல் உள்ள பிழைகளை சரி செய்ய முடியாது என்பதால் ஐடிஆர் அனைத்து வகையிலும் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். ITR-ஐ உரிய நேரத்தில் தாக்கல் செய்யாததன் முக்கிய பாதிப்புகளில் ஒன்று, சில சந்தர்ப்பங்களில் வருமான வரி அதிகாரிகள் அதனை வரி ஏய்ப்பு நடவடிக்கையாக கருதலாம். இதனிடையே வருமானத்தை குறைத்து காட்டினால் 270Aன் கீழ் அபராதம் விதிக்க வருமானம் அதிகாரம் இருக்கிறது. இந்த அபராதம் வரிசெலுத்துவோர் ஏய்த்த வரியில் 50 சதவீதம் என்ற அளவிற்கு சமம். இது தவிர்த்து அவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனையும், வரிஏய்ப்பு செய்யப்பட்ட தொகையை பொறுத்து அதிக அபராதமும் விதிக்கப்படலாம்.