நம் நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் இன்றைக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆன்லைன் வாயிலாகவே பணிப்பரிமாற்றத்தை செய்து வருகின்றனர். அதோடு பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து ஏழை-எளிய மக்களுக்கும் வங்கிக்கணக்கு திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இப்போது அரசின் அனைத்து நலத்திட்ட உதவித் தொகைகளும் நேரடியாக மக்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பணம் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதால் அரசுக்கு சுமார் 2.2 லட்சம் கோடி மிச்சமாகி இருப்பதாக மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் தகவல் தெரிவித்து உள்ளார். அதுமட்டுமின்றி அரசின் திட்டங்களில் பயன்பெறும் போலியான பயனாளிகள் கண்டறியப்படுகின்றனர். மேலும் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலுள்ள இடைத்தரகர்களின் ஊழல் போன்றவை தடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.