தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித பணிகளையும் செய்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடப்பதாக வதந்தி பரப்புபவர்கள் மீது தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது

இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியை தாங்கி கொள்ள முடியாமல் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சர்ச்சை கிளப்பியுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும்  3-வது அணி உருவாகாமல் 2 அணியோடு இருக்க வேண்டும் என்ற கலைஞரின் நோக்கத்தை முறியடிக்கும் விதமாக இப்படிப்பட்ட சர்ச்சைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும் யார் இதை செய்கிறார்களோ அவர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.