நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரி பாய் காலனி என்ற பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இவர்கள் பல காலமாக  உள்ளதால், குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மக்கள் நீண்ட காலமாக இங்கு வசிப்பதால், சில ஆண்டுகளுக்கு முன் பல பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் தங்களுக்கென செட் அமைத்துள்ளனர்.

இதனை கண்ட  நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர். உடனே  அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சாலையில் அமர்ந்துக்கொண்டு, தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் அந்த மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து தாசில்தார் ராஜசேகரன் கூறியுள்ளதாவது, ‘கஸ்தூரிபாய் காலனி நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்தவர்களுக்கு அரசாணைப்படி ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல காரணங்களால் ஒரு சில பேருக்கு மட்டும்  பட்டா கிடைக்கவில்லை. எனவே அந்த பகுதியில் அவர்கள் நீண்ட காலமாக வசிப்பதால், நகராட்சி நிர்வாகம் அவர்களை அப்புறப்படுத்தாமல் உள்ள நிலையில், புதிதாக அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்படுகிறது.  அவற்றை நகராட்சி அதிகாரிகள் அகற்றுகின்றனர். அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையில், மக்களுக்கு மாற்றிடம் வழங்க பரிசீலிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் அவர்கள் மாற்றிடத்திற்கு செல்ல மறுக்கின்றனர் என்று கூறியுள்ளார்.