தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறந்தைராயன் கிராமத்தில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே பொது பிரச்சனை உட்பட சில காரணங்களால் முன் விரோதம் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமிர்தலிங்கம் தனது வீட்டின் முன்பாக சாலையோரத்தில் பெண்கள் உள்ளிட்டோரை தகாத வார்த்தைகளால் குறிப்பிட்டு பிளக்ஸ் வைத்துள்ளார்.

இதனால் அமிர்தலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று பட்டுக்கோட்டை – தஞ்சை பிரதான சாலையில் உள்ள உறந்தைராயன் குடிகாட்டில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் உறந்தைராயன் குடிகாட்டைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, பெண்கள் உள்ளிட்டோரை தகாத வார்த்தைகளால் குறிப்பிட்டு ஏன் பிளக்ஸ் போர்டு வைத்தீர்கள்? என அமிர்தலிங்கத்திடம் நான் முறையிட்டேன். அப்போது அவரும் அவருடைய மனைவி சுமத்ரா மற்றும் மகள் அனிதா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தன்னை தாக்கியது மட்டுமல்லாமல் எனக்கு  கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் அமிர்தலிங்கம், சுமத்ரா, அனிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அனிதாவை கைது செய்துள்ளனர். மேலும் அமிர்தலிங்கம், அவரது மனைவி சுமத்ரா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.