உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில், 2019 மே மாதம் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 24 வயது இளைஞரான மூல்சந்த் என்பவருக்கு போக்ஸோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மூல்சந்த்க்கு இப்படி ஒரு தண்டனை கிடைக்க அவரது  தாயாரின் வாக்குமூலம் தான் காரணம். அவரது வாக்குமூலத்தின்படி, 

குற்றம் சாட்டப்பட்ட மூல்சந்த், சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்றபோது இந்த குற்றம் நடந்துள்ளது. குற்றம் தொடர்பான ஆதாரங்களை அழிக்கவும் மூல்சந்த் முயன்றுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, காயத்துடன் வலியால் துடித்து வீட்டில் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின்  குடும்ப உறுப்பினர்களின்  புகாரின் அடிப்படையில் ஒரு “அடையாளம் தெரியாத நபர்” மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, குற்றத்திற்கு நேரில் கண்ட சாட்சிகள் அப்போது இல்லை, மேலும் சிறுமியாலும் தன்னை  தாக்கியவரை முதலில் அடையாளம் காண முடியவில்லை, அவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்.

சம்பவம் நடந்த அதே நாளில், முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டு, சிறுமிக்கு மாவட்ட மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது, அதில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த அனைத்தையும் அறிந்த ஒரே சாட்சியாக  மூல்சந்தின் தாயார் இருந்தார்.

குற்றவாளியின் உண்மையான அடையாளம் தெரியாமல் நிலைகுலைந்து காணப்பட்ட குடும்பத்தினரை கண்டு வெம்பி ஏற்பட்ட குற்றவுணர்ச்சியின் காரணமாக தனது மகனுக்கு எதிராக காவல்நிலையத்தில் வாக்குமூலம்  அளிக்க, மூல்சந்த் கைது செய்யப்பட்டு, அக்டோபர் 19, 2019 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற சிறப்பு நீதிபதி சஞ்சய் குமார், மூல்சந்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.