
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றிருக்கிறார்கள். குடியரசு தினம் தொடர்பான விழாக்கள் அனைத்தும் இன்றுடன் முடிவடைகின்றன. பிற நடவடிக்கைகளுக்கான பணி தொடங்குகிறது. அடுத்த கட்டமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் போன்ற பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.
குறிப்பாக பட்ஜெட்டின் இறுதி அம்சங்கள் குறித்து அமைச்சரவையைச் சேர்ந்தவர்களுக்கு தெரிவிக்கப்படலாம் என்றும், அது தவிர நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்கும் போது குடியரசுத் தலைவர் உரை, அதன் பிறகு பட்ஜெட், அதன் பிறகு குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் என பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து நடைபெற உள்ளன. அந்த சமயத்தில் மத்திய அமைச்சர்கள் எந்த மாதிரியான தகவல்கள் மற்றும் கருத்துக்களை வலியுறுத்த வேண்டும். என்னென்ன முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதெல்லாம் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது