இந்தியாவில் பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டு அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்த சலுகைகள் இல்லை என்பதால் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது என்பது சாத்தியமற்றது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தெளிவுபடுத்தி விட்டார். அதோடு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு தேசிய பென்சன் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி உதவி கிடைக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இமாச்சல் பிரதேசத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தின் போது ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் அல்லது புதிய பென்ஷன் திட்டம் ஆகியவற்றில்  எதில் இணைய விரும்புகிறார்களோ அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின் பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களும் நேரடியாக பழைய பென்ஷன் திட்டத்திற்கு கீழ் வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.