அண்ணா பல்கலைக்கழகத்தில் போலியான டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போலியான டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் தேவா, வடிவேலு, ஈரோடு மகேஷ், டான்ஸ் மாஸ்டர் சாண்டி உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இது குறித்து சர்ச்சை எழுந்தது. இந்த பிரச்சனை குறித்து துணைவேந்தர் வேல்ராஜ் நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

அப்போது பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற விழாவிற்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் பல்கலைக்கழகத்தின் பெயரைச் சொல்லி நீதிபதி வள்ளிநாயகத்தையும் ஏமாற்றி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான அமைப்பு என்று கூறி முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்றும் கூறினார். இந்த பிரச்சனை குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.