மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், கணவரின் குடிப் பழக்கத்தை (Alcoholism) குணப்படுத்துவதாக நம்பவைத்து, ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் (Rape) செய்ததாக ‘பதே பாபா பாதர்டி-வாலா’ (Bade Baba Pathardi-wala) என்றழைக்கப்படும் கணேஷ் ஜெயராம் ஜக்தாப் என்ற போலிச் சாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணேசும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்ததன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால், இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குடிப் பழக்கத்தை நீக்குவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் நம்பிக்கையை வென்ற கணேஷ் ஜக்தாப், அவரைச் சமய இடங்களுக்கு அழைத்துச் சென்று சடங்குகள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதன் மூலம், உணர்ச்சி ரீதியான கையாளுதல் மற்றும் பயமுறுத்தல் ஆகியவற்றை உபயோகித்துப் பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கணவரின் குடிப் பழக்கமும் நீங்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்மணி, இந்திரநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தச் சாமியார், வாடால-பாதர்டி சாலையில், ‘பதே பாபா மச்சேந்திரநாத் ட்ரஸ்ட்’ என்ற பெயரில் ஆசிரமம் அமைத்து, ஏற்கெனவே 8 பேரிடம் இருந்து ₹19 லட்சம் வரை மோசடி செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.