உலகின் மிகப் பெரிய தங்கச் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றான ‘வால் காம்பி’ (Valcambi) என்ற சுவிஸ் நிறுவனத்தை வாங்கிய இந்தியர் தான் ராஜேஷ் மேத்தா (Rajesh Mehta) ஆவார். ராஜேஷ் மேத்தாவின் நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் (Rajesh Exports Limited), உலகிலேயே மிகப்பெரிய தங்க நிறுவனம் ஆகும்.

இது ஆண்டுதோறும் 2,000 டன்களுக்கும் அதிகமான தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் போன்றவற்றைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. ராஜேஷ் மேத்தா, ஒரு காலத்தில் பெங்களூரில் உள்ள தனது வீட்டுக் கேரேஜில் இருந்து தனது தங்க நகை உற்பத்தியைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரம் செய்து வந்த தன் குடும்பத் தொழிலை ராஜேஷ் மேத்தா, கடின உழைப்பால் உலகச் சந்தை வரை விரிவுபடுத்தினார். ஜூலை 2015-இல் சுவிட்சர்லாந்தில் உள்ள ‘வால் காம்பி’ ஆலையை வாங்கிய பிறகு, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய தங்கச் சுத்திகரிப்பு மற்றும் நகை உற்பத்தி நிறுவனமாக மாறியது.

இவரது நிறுவனம், உலகின் மொத்தத் தங்கத்தில் 35 சதவீதத்திற்கும் அதிகமாகச் சுத்திகரிப்பு செய்வதாகவும், இது ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.