டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி மாலை 6.52 மணியளவில் கார் வெடித்துச் சிதறிய பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் பலியானார்கள்; 27 பேர் காயம் அடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர். இந்தத் தாக்குதலை நிகழ்த்தியது பயங்கரவாதி டாக்டர் உமர் முகமது என்பது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் உடல் சிதறி இறந்துவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, காஷ்மீர் டாக்டர் முசாமில், பெண் டாக்டர் ஷாகீன் உள்ளிட்ட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அரியானா மாநிலத்தில் செயல்படும் அல்-பலா பல்கலைக்கழகம் சர்ச்சையில் சிக்கியுள்ளதால், அதன் உறுப்பினர் அங்கீகாரத்திற்கு இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும், பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் 45 வயது அறுவை சிகிச்சை டாக்டர் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னர், அரியானாவின் நூ மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு டாக்டர்களில் ஒருவர் அல்-பலா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்; மற்றொருவர் பயிற்சி டாக்டர் ஆவார்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தின் முக்கிய சதிகாரராகக் கருதப்படும் அமீர் ரஷீத் அலியை என்.ஐ.ஏ. அமைப்பு இன்று கைது செய்திருக்கிறது. இவர் உமருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியவர் என்றும், வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் இவரின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
இதுவரை காயமடைந்தவர்கள் உட்பட 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி கார் வெடிப்புச் சம்பவம் ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என்றும் என்.ஐ.ஏ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
