நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயக்கப்படுகிறது. கனமழை காரணமாக ரயில் பாதையில் பாறைகள் விழுந்து மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. நேற்று மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டது. அது குன்னூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் சென்றபோது எஞ்சின் பழுதாகி நடுவழியில் நின்றது. அதே நேரம் ரயில் தண்டவாளத்தில் காட்டு யானைகள் நின்று கொண்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.

உடனே ரயில்வே நிர்வாகத்தினர் 4 பெட்டிகளுடன் கூடிய மாற்று வேலைரயிலை குன்னூரில் இருந்து அனுப்பி சுற்றுலா பயணிகளை மீட்க முடிவு செய்தனர். மேலும் தண்டவாளத்தில் யானைகள் நின்றதால் அதிர்ச்சியடைந்தனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் ரயில் நின்றதால் சுற்றுலா பயணிகள் உணவு, தண்ணீர் இன்றி சிரமப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு ரயில் புறப்பட்டு வந்தது. மலை ரயில் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே முறையாக பராமரித்து ரயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.