சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச் என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆட்டோ ரிக்ஷா சேலஞ் சுற்றுலா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 28-ஆம் தேதி சென்னையில் இருந்து தொடங்கிய பயணத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 26 வெளிநாட்டினர் 9 குழுக்களாக தனித்தனி ஆட்டோகளில் புறப்பட்டு புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் வழியாக நேற்று தூத்துக்குடிக்கு வந்தனர்.

இதனையடுத்து சுற்றுலா பயணிகள் அனைவரும் தூத்துக்குடி சாயர்புரம் அருகே இருக்கும் தனியார் பண்ணை தோட்டத்திற்கு சென்று தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பின்னர் பொங்கலை அனைவரும் பரிமாறி சாப்பிட்டனர். அப்போது சிறப்பாக பொங்கல் வைத்த மூன்று குழுவினருக்கு வாழைத்தார் பரிசாக கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வெளிநாட்டினர் பொங்கல் கொண்டாடினர். இதனை அறிந்த சுற்றுவட்டார மக்கள் அங்கு திரண்டு பார்த்து ரசித்தனர்.