தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் பகுதியில் வசிப்பவர் ஞானராஜ். சிவில் சப்ளை தாசில்தாராக உள்ள இவருக்கு கிரேசி விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பின் இவரது மனைவி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எனது 2 குழந்தைகளையும், அவர்களின் விருப்பத்துக்கு மாறாக ஞானராஜ் அழைத்து சென்று விட்டு, சரிவர பார்க்காமல், தனது உறவினரிடம் ஒப்படைத்துள்ளார். எனவே குழந்தைகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு குழந்தைகள் தாயின் பராமரிப்பில் வளர வேண்டும் என்றும், 2 குழந்தைகளின் தற்காலிக பராமரிப்பு உரிமை தாய் கிரேசி விஜயாவுக்கு வழங்கப்படுகிறது. எனவே அவரிடம் 2 குழந்தைகளையும் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கிரேசி, ஞானராஜ் வீட்டுக்கு சென்று, இது குறித்து பேசியபோது முறையாக யாரும் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தனது குழந்தைகளை ஒப்படைக்க கோரி, அவரது வீட்டிற்கு முன், அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.