பிலிப்பைன்ஸில் திடீரென்று மின் சேவை தடைபட்டதால் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தில் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் இருக்கும் விமான நிலையம் எந்த சமயத்திலும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும். அந்நாட்டில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் அதிக முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படும். இந்த நாட்களில் விடுமுறையை கொண்டாட பல நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு மக்கள் வருவார்கள்.

இந்த கொண்டாட்டங்களின் போது, பிற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பிலிப்பைன்ஸிற்கு வருவது வழக்கமாக நடைபெறும் ஒன்று. இந்நிலையில் மணிலா விமான நிலையத்தில் திடீரென்று மின்தடை ஏற்பட்டது. எனவே பயணிகள் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தில் மாட்டி தவித்து வந்தார்கள்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியிருக்கின்றன. இந்த மின்தடையால், விமான போக்குவரத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்கு தற்காலிகமாக பாதிப்பு உண்டானது. இதனைத்தொடர்ந்து சுமார் 300 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக புத்தாண்டை உற்சாகமாக கொண்டாட ஆர்வமுடன் இருந்த 56 ஆயிரம் பயணிகள் பாதிப்படைந்திருக்கிறார்கள். மின்விநியோகத்திற்கு இருப்பு இருந்தது. எனினும், தகுந்த மின்சாரம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்காக நாட்டின் போக்குவரத்து செயலாளர் பயணிகளிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார்.