உத்திர பிரதேசம் மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி வளர்ப்பு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இளம் பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர் 19 வார கர்ப்பிணியாக இருக்கிறார். அவர் சிறுமி என்பதால், குழந்தையை வளர்க்கும் பக்குவத்தில் இல்லை என்று கூறினார். அதோடு பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பமானது அவருக்கு மனவேதனையை கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கர்ப்பமடைந்த பெண்ணின் கருவை கலைக்கவிடாமல் செய்து குழந்தை பெற்றுக் கொள்ள வைப்பது என்பது அந்தப் பெண்ணின் அடிப்படை உரிமையையும், கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையையும் மீறுவதாகும் என்று கூறினார். மேலும் குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமா? அல்லது கலைக்க வேண்டுமா? என்ற முடிவை எடுப்பதற்கான உரிமை அவருக்கு தான் உள்ளது. மருத்துவ கருத்தரிப்பு சட்டத்தின் படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவர் மருத்துவர் ரீதியாக கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.