நாக்பூரில் விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்காக கணவர் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நாக்பூரில் உள்ள வேலையில்லாத ஒரு நபர் தனது மனைவியுடன் விவாகரத்து பெற்றுள்ளார்.
இந்த வழக்கில் நீதிமன்றம் மாதம்தோறும் ரூபாய் 6000 ஜீவனாம்சம் வழங்குவதற்கு உத்திரவிட்டது. இந்நிலையில் வேலை இல்லாமல் தவித்து வந்த அந்த நபர், சமீபத்தில் மனிஷ் நகரில் பைக்கில் சென்ற போது அதே பகுதியை சேர்ந்த 74 வயது மூதாட்டியின் தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
இதுகுறித்து அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மூதாட்டியின் தங்கச் சங்கலியை பறித்துச் சென்ற நபர் மன்காபூரை சேர்ந்த கன்ஹாயா என்பது தெரிய வந்தது.
பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ. 6000 ஜீவனாம்சம் வழங்குவதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்டதை குற்றவாளி ஒப்புக்கொண்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலையில்லாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையில், திருடப்பட்ட நகைகள் அனைத்தும் உள்ளூர் நகை வியாபாரியிடம் விற்றதும் தெரிய வந்தது.
பின்னர் கன்ஹையாவிடம் இருந்த 10 கிராம் தங்க நகை, ரூபாய் 1.85 லட்சம் மதிப்புள்ள பைக், ஒரு மொபைல் போன் ஆகியவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
