மதுரை மாவட்டம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்த பிறகு எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு கடந்த 2 வருடங்களாக பட்டியல் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் சமூக நீதிப் பாதுகாப்பு என கூறி மத்திய அரசுக்கு திரும்ப அனுப்பி வைத்துள்ளது. திராவிட கட்சிகள் பட்டியல் சமுதாயத்தினர் மீது வெறுப்புணர்வை காண்பிக்கிறார்கள். இதை அம்பேத்கர் தான் தட்டிக் கேட்க வேண்டும். இதனால் தான் தற்போது அம்பேத்கரிடம் மனு கொடுத்துள்ளோம்.

வேங்கை வயல் சம்பவத்தில் திருமாவளவன் ஒரு நாள் கூட சென்று போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஏனெனில் அந்த சம்பவத்தில் திமுக கவுன்சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். பட்டியல் சமுதாயத்தினர் மீது திருமாவளவனுக்கு அக்கறை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்கும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியது. பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க பாஜக நடத்தும் போராட்டத்தில் திருமாவளவன் கலந்து கொள்வாரா.? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.